சமூக செயற்பாட்டாளர்கள் கைது- நாடுமுழுவதும் கண்டனம்!

மகாராஷ்டிராவின், பீமா கோரேகான் அஞ்சலி சம்பவத்தையடுத்து தலித்துகள் மற்றும் உயர் ஜாதியினர் நடுவே நடந்த கலவரம் தொடர்பாக புனே போலீசாரின் முறையற்ற  கைது நடவடிக்கைகள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா,
சத்தீஷ்கர் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் ஆக. 28ம் தேதி போலீஸ் சோதனை நடத்தப்பட்டது. இதில், இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 கைதான 5 இடதுசாரி ஆதரவாளர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத் துக்காகவும், அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவும் தொடர்ந்து பாடுபட்டு வருபவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் நடந்த கலவர வழக்கு, பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில்  மேற்படி 5 பேர் வீடுகளில் புனே போலீஸார் திடீர் சோதனை நடத்தி அவர்களைக்  கைது செய்துள்ளனர்.
 ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புரட்சிக் கவிஞரும், எழுத்தாளருமான வரவர ராவ், நக்சல் இயக்கத்தை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. விரசம் (புரட்சி எழுத்தாளர்கள் சங்கம்) என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். பழங்குடியின மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். நக்சல் அமைப்பினரின் கொள்கைகளை ஆதரித்து கவிதைகள், பாடல்கள் புனைந்துள்ளார். ஆந்திர மாநில அரசுகள் மாறினாலும், இவர் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. ஆந்திர மாநில போலீஸாரால் பலமுறை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த வெர்னான் கோன்சால்வஸ் எழுத்தாளர். சமூக ஆர்வலர், தொழிற்சங்கவாதியாவார். நக்சல் இயக்கத்தை ஆதரித்தார் என காரணம் காட்டி 2007-ல் இவர் கைது செய்யப்பட்டார். இது வரை இவர் மீது 20 வழக்குகள் பதிவாகியுள்ளன. 17 வழக்குகளில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மும்பையிலுள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். பின்னர் அந்த வேலையை அவர் ராஜினாமா செய்துவிட்டு நலிந்த பிரிவினரின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்.
 டெல்லியிலுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார் சுதா பரத்வாஜ். தொழிற்சங்கவாதி, வழக்கறிஞர் என பல பணிகளை இவர் செய்து வருகிறார். மேலும் குடியுரிமை சுதந்திரத்துக்கான மக்கள் அமைப்புக்கு தேசியச் செயலராக இருக்கிறார். கான்பூர் ஐஐடி-யில் பட்டப்படிப்பு படித்தவர். தைரியமாக களத்தில் இறங்கிப் போராடிவருபவர் சுதா.
 மும்பையைச் சேர்ந்த அருண் பெரைரா வழக்கறிஞர் ஆவார். மனித உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். இவர் 2007-ல் இதேபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் 2012-ல் அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோள் என போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
 ஹரியாணாவில் வசிக்கும் மனித உரிமைப் போராளியான கவுதம் நவ்லகா, மக்கள் ஜனநாயக உரிமை யூனியன் அமைப்பின் உறுப்பினர் ஆவார். பத்திரிகையாளராக சில காலம் பணியாற்றினார். 2011-ல் இவர் ஜம்மு-&காஷ்மீர் சென்றபோது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இவர் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் டெல்லிக்கு அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான பாடுபட்டுவருகிறார்.
 உ.பா. சட்டம் இவர்கள் மீது பாய்ந்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். கைது நடவடிக்கையில் காவல்துறை அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியான மீடியா செய்திகள் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தானாக முன்வந்து (சுவோ மோட்டோ) வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க கூறி மகாராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம். மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபிக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 4 வாரங்களுக்குள், அரசு தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தாபர், தேவகி ஜெய்ன், பிரபாத் பட்நாயக், சதீஷ் தேஷ்பாண்டே மற்றும் மஜா தருவலா ஆகிய 5 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 அப்போது மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், கைதானவர்களுக்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புள்ளதாக ஆதாரங்கள் இருப்பதாகவும், 15 நாட்களுக்கு போலீஸ் காவலில் இவர்களை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். செப்டம்பர் 4ம் தேதிக்குள், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், செப்டம்பர் 6ம் தேதிவரை கைது செய்யப்பட்ட ஐவரையும் அவரவர் வீடுகளில் வீட்டுக்காவலில் வைக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
 

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா